ஒரு உண்மையான நெகிழ்ச்சி பதிவு, முகநூலில் இருந்து....
இருதினம் முன்பு பெரியப்பா கொரோனாவால் உயிரிழந்துவிட்டார் என்கிற செய்தி வந்தது. என் வாழ்வின் பெரும் விசையாக எனக்கிருந்தவர். ஸ்டான்லி மருத்துவமனைக்குச் சென்றேன். கறுப்பு நிற பிளாஸ்டிக் உறையில் அவரை ‘பேக்’ செய்து கொடுத்து, ‘வீட்டுக்குக் கொண்டு செல்லக் கூடாது. நேரடியாக சுடுகாட்டுக்குத்தான், ஆம்புலன்ஸ் கிடைக்கும் வரை சவக்கிடங்கில் வைத்திருப்போம்’ என்றார்கள். சவக்கிடங்கில் கறுப்பு நிற பிளாஸ்டிக் உறையில் கிடத்தப்பட்டிருந்த பிணங்களைப் பார்த்தபோது ஏற்பட்ட உயிர் பயம் எனக்கும் இன்னும் அகலவில்லை. ஒரு வாரமாக மருத்துவமனையிலேயே இருந்த என் அண்ணன் சொன்ன கதைகளைக் கேட்டபோது, ‘இங்கு வந்திருக்கத் தேவையில்லையோ, மூன்றாவதாக ஒரு மாஸ்க் கொண்டு வந்திருக்கலாமோ, Face shield என திவ்யா ஏதோ சொன்னதை மாட்டிக் கொண்டு வந்திருக்கலாமோ’ என்று குடும்பம் கண்முன் வந்து போனது. ஆனால், இங்கே யாருமில்லை எனில் ஓர் அநாதைப் பிணம்போல என் பெரியப்பா கிடந்திருப்பார். என்னை எப்படியெல்லாம் வளர்த்தார் என்பதை மேலும் பூதாகரப்படுத்திக்கொண்டு அங்கு நின்றிருந்தேன்.
புதுப்பேட்டை கோழிக்கறி மார்க்கெட்டில், நாம் கேட்டதும் தானியங்களைக் கொத்திக்கொண்டிருந்த கோழியில் ஒன்றைப் பிடித்து அதன் தொண்டையைச் சீவி ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் போட்டு சத்தமடங்கியதும் தூக்கி வெட்டுப் பலகையில் வைத்துத் துண்டுகளாக்கி கறுப்பு நிற பிளாஸ்டிக் கவரில் பார்சல் செய்து கொடுப்பார்கள். எல்லாம் கடகவென்று நடக்கும். தொடர்ந்து செய்வதனால் கைவரப்பெற்ற லாகவம் அதிலிருக்கும். அந்த லாகவத்தை பிணக்கிடங்கிற்கு முன் இருக்கும் மாநகராட்சி அதிகாரிகளிடமும் ஊழியர்களிடமும், மருத்துவர்களிடமும் பார்த்தேன்.
நீண்ட நேரமாகியும் அரசு இலவச ஆம்புலன்ஸ் எதுவுமே அங்கில்லை. அலைபேசியில் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. ‘தனியார் ஆம்புலன்ஸ் இருக்கிறது’ என்று அந்த வளாகத்திலேயே சற்றுத் தள்ளி நின்றிருக்கும் ஆம்புலன்ஸ்களைக் காட்டினார்கள். ஸ்டான்லியிலிருந்து பெருங்குடிக்குக் கொண்டு செல்ல அவர்கள் கேட்ட தொகை பதினோராயிரம். சூழலைப் புரிந்துகொண்டு நிகழ்த்தும் கயமைத்தனம். மாலைப் பொழுது நெருங்கவே, குடும்பத்தினர் சுடுகாட்டிற்கு வந்தால் முகத்தையாவது பார்ப்பார்கள் என்பதால் பேரம் பேசினோம். எட்டாயிரத்திற்கு வந்தார்கள். பெருங்குடி சுடுகாட்டில் ஏற்கெனவே மூன்று பிணங்கள் வரிசையில் இருக்க, நான்காவதாக பெரியப்பா காத்துக் கொண்டிருந்தார். நாங்கள் யாரும் அருகே இருக்க அனுமதியில்லை. வறண்ட கண்களுடன் என் பெரியம்மா நின்றிருந்த காட்சி கண்களில் இன்னும் நிறைந்திருக்கிறது. நெருங்கிய உறவுகள் ஒரு பத்துப் பேர் தூரத்தில் நிற்க, அவர் மின் தகனம் செய்யப்பட்டார். அத்தகைய பிரியாவிடைக்கு அவர் தகுதியற்றவர்!
பெரியப்பாவின் சாம்பலுக்காகக் காத்திருந்தபோது, எரியூட்டு வேலைகளைச் செய்யும் தம்பிகளிடம் “ஏம்ப்பா இவ்ளோ நேரம்” என்றேன். “எங்க சார், வந்துனே இருக்குது. இன்னா பண்றது. எல்லாம் கொரோனா கேஸ்ங்கதான். இன்னொரு மிசினு ரெடி பண்ணிக்கிறாங்க. நாளைல இருந்து சீக்கிரம் ஆய்டும்” என்றார். இது தவிர, அயப்பாக்கம் சுடுகாட்டுக் கதைகளை என் உறவினர் சொல்லக் கேட்க, ஏதோ இரண்டாம் உலகப்போர் பற்றிய திரைப்படங்களில் பெரும் அழிவுக்குப் பின் பிணங்கள் ஆங்காங்கே எரியும் காட்சிகள் தோன்றி மறைந்தன. நண்பர்களிடம் உரையாடினால் அவர்கள் சொல்வதைக் கேட்கவே இயலவில்லை. துயரம் புழுதிப் புயலைப் போல ஊரில் வியாபித்திருக்கிறது. அரசு கொடுக்கும் எண்ணிக்கைக்கும் தினசரி இறப்பவர்களுக்கும் பெரிய இடைவெளி இருக்கிறது என்பதை யூகிக்க முடிந்தது. மக்கள் பீதியடையக் கூடாது என்பதால்கூட இருக்கலாம். ஆனால், போன புளிமூட்டை ஆட்சிக்கு இந்தப் புதிய அரசின் யத்தனங்கள் ஒரு நம்பிக்கையை அளிக்கின்றன என்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.
என் அப்பாவிற்கு இணை நோய்கள் இருப்பதால் அவரை இறுதிச் சடங்கிற்கு வரவேண்டாமெனச் சொல்லிவிட்டோம். தன் அண்ணனின் முகத்தைக்கூடப் பார்க்க இயலாமல், அவர் புகைப்படத்தை செல்போனில் தொட்டு என் அப்பா அழுததாக உணவு பரிமாறும்போது அம்மா சொன்னார்கள். எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மனிதர் அழுவதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.
எப்படியும் ஒருநாள் இறக்கப்போவது இயற்கையின் விதியே! ஆனால், மரணத்திற்கு எந்தவித மதிப்பும் இல்லாத ஒரு சூழலில் மரித்துப்போகும் அவலத்தை நாமாக உருவாக்காமல் இருப்பது நமக்கும், நம்மைச் சார்ந்தவர்களுக்கும் நாம் செய்யும் மரியாதை. உயிர்த்திருத்தலின் குற்ற உணர்விலிருந்து நம்மைச் சார்ந்தவர்களை மீட்கும் பொறுப்பு!

இறுதி மூச்சு...
ReplyDelete❤❤❤
ReplyDelete👏👏
ReplyDeleteExplain the Reality with broken heart 😥
ReplyDelete❤️
ReplyDelete